search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு? நாளை மறுநாள் ஸ்பெயின்-இங்கிலாந்து பலப்பரீட்சை
    X

    ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு? நாளை மறுநாள் ஸ்பெயின்-இங்கிலாந்து பலப்பரீட்சை

    • கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
    • இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெர்லின்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜெர்மனியில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. அவைகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

    லீக், நாக் அவுட் மற்றும் கால் இறுதி போட்டி முடிவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரை இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர் லாந்தையும் வீழ்த்தின.

    ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நள்ளி ரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    3 முறை சாம்பியனான ஸ்பெயின் (1964, 2008, 2012) 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. அந்த அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஸ்பெயின் அணியில் டானி ஓல்மோ 3 கோல்களும், பேபியன் ரூயிஸ் 2 கோலும் அடித்து உள்ளனர். அந்த அணி அனைத்து பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இங்கிலாந்து அணி இதுவரை ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில்லை. கடந்த 2020-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முதல்முறையாக முன்னேறியது. இதில் இத்தாலியிடம் தோற்றது.

    தற்போது 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (3 கோல்), ஹூட் பெல்லிங்காம் (2 கோல்), சகா, லாட்கிங்ஸ் (தலா ஒரு கோல்) உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்து அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×