என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் எதையேனும் விழுங்கிவிட்டால்...
- கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான்.
- மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு.
சில குழந்தை கீழே எது கிடந்தாலும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். அதேபோல் ஆசையாக நாம் குழந்தைகளுக்கு வாங்கித் தரும் சாக்லேட் போன்றவை, சில நேரங்களில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். சாக்லேட் மட்டுமல்ல குழந்தைகள் சில நேரங்களில் காசு, ரப்பர், கோலிக்குண்டு, பாசி, ஹேர்பின், நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி போன்றவற்றை வாயில் போட்டு விழுங்கிவிடுவதுண்டு. அப்படி விழுங்கிவிட்டால் குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்? இதுபற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக் கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக் கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.
குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது.
பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும்.
வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.
ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும்.
அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்