search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பற்களை பராமரிக்க குழந்தைகளுக்கு சொல்லித்தருவது எப்படி?
    X

    பற்களை பராமரிக்க குழந்தைகளுக்கு சொல்லித்தருவது எப்படி?

    • குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் சொல்லித்தர வேண்டும்.
    • சாப்பிட்டதும் குழந்தைகளை வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

    மழலைகளின் புன்னகை.... அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவை. குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை பார்க்கலாம்...

    * பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.

    * குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட்(பற்பசை) கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.

    * பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் அனைவருமே இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரால் வாயை கொப்பளித்து மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்.

    * பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள். பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளின் 7-12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின், கட்டாயமாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

    * வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.

    * குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.

    * குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என சொன்னால், நீ இரண்டு வேளைகளிலும் பல் துலக்குகிறாயா? என நம்மையே எதிர்கேள்வி கேட்பார்கள். ஆக பெற்றோர்களாகிய நாமும் தினமும் இருவேளைகளிலும் பல் துலக்குவதை கட்டாயமாக செய்தால்தான், நாம் சொல்வதை குழந்தைகளும் கேட்பார்கள்.

    * சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

    * சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத பல் கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தகைய பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள மெடிக்கல், பல் சாராத மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது.

    Next Story
    ×