search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    முழுமையான கல்வியே நிரந்தர உயர்வுக்கு வழி
    X

    முழுமையான கல்வியே நிரந்தர உயர்வுக்கு வழி

    • ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம்.
    • மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும்.

    கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடில்லாமல் சென்றடைய வேண்டும். இவ்வகையில் பார்க்கும்போது இந்தியா ஓரளவிற்கு முன்னேறி வருகிறது எனலாம். அதே நேரத்தில் இன்னமும்கூட இந்தியாவின் சில குக்கிராமங்களில் குழந்தைகள் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். உயர்கல்வி பற்றின விழிப்புணர்வு எல்லாத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். நம் கல்வித் திட்டம் ஒரு மனிதனை சுயசார்புடையவனாக வளர்க்க வேண்டும். இவ்வுலகில் சக மனிதர்களோடு வளைந்து கொடுத்து, அதாவது அனைவரின் கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் நேர்மை தவறாமல் எப்போதும் மகிழ்வுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.

    தனிமனித வளர்ச்சிக்கும் ஒரு நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப, அரசியல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். இந்த கல்வி சிறப்பாய் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நாட்டின் வருங்காலம் ஒளிமயமாகும் என்பது வெளிப்படையான உண்மை.

    சர்வகலாசாலையில் பல பட்டங்களை பெறுவது மட்டுமே கல்வியல்ல என்பதை உணர்தல் வேண்டும். கற்றல் என்பது எந்த கணப்பொழுதும் நிகழக்கூடியது. எனவே நாம் எப்போதும் கற்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் என மாணவப் பருவத்திலேயே நமக்கு அறிவுறுத்தும்படி நம் பள்ளிக் கல்வி அமைய வேண்டும்.

    ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம். பிறகே ஆசிரியரின் பங்கு. சொல்லப் போனால் ஒரு மனிதனை செதுக்குவதில் மேற்படி இருவருக்குமே, இரண்டு சிற்பிகளுக்குமேதான், முக்கிய பங்கு. ஆனால் தற்போது நிலைமை குழந்தைகள் சரியானபடி பயிலாதபோது ஒருவர் மேல் மற்றவர் குறை சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இந்நிலை முற்றாக மாறவேண்டும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்து விடாமல் புத்திசாலி என நம்பும் பலரின் அறியாமை மாற வேண்டும்.

    மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயல்முறை படுத்தும்போது அவரவரின் புத்துருவாக்கத்திற்கு அதில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் முதுகெலும்புள்ள, சுயசிந்தனையை வளர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடக்கூடிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அறிய திறமைகள் பொதிந்துள்ளன.

    அதை வெளிக்கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர் என்கிறார் விவேகானந்தர் எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை மற்றும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பதில் ஆசிரியருக்கு என்ன பங்கு இருக்கிறது. எனவே கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அவர்களை நன்கு தேர்ச்சி பெற செய்வதில்தான் ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கிறது என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும்.

    முழுமையான கல்வி என்பது ஒருவனுக்கு முதலில் தான் என்கிற தன் முனைப்பை அழிக்கும். ஜாதி, மத பேதங்களை அவனுள்லிருந்து அறவே நீக்கும். இந்தியா என் நாடு என்பதைவிட இந்த உலகம் என் வீடு எனும் பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தும். பல புத்துருவாக்கங்களுக்கான வீரிய வித்துக்களை விதைப்பவனாக மாற்றும். இப்படிப்பட்ட கல்வியை கொணர்வது நம் அனைவருடைய சமூக பொறுப்பு.

    Next Story
    ×