search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்க காரணங்கள்...
    X

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்க காரணங்கள்...

    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
    • குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

    அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும்.

    இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×