search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    தற்கொலைகளை தடுக்க மாணவர்ளுக்கு மனநல ஆலோசனை வகுப்புகள்
    X

    தற்கொலைகளை தடுக்க மாணவர்ளுக்கு மனநல ஆலோசனை வகுப்புகள்

    • இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை.
    • மனதளவில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.

    அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

    தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

    கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

    ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

    தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

    தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

    இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

    இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

    மனநல ஆலோசனை

    மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

    அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

    பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

    இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் கூறுகையில், 'மனதளவில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வியல் வகுப்புகள் நடத்தப்படுவது அவசியம். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்வது எப்படி? தோல்வியை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? என்பது பற்றி தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது எதையும் அவர்கள் கையாளுவதற்கு மாணவர்களால் முடியும். எதிர்நீச்சல் போடுவது எப்படி? என்பதை மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். மனதளவில் மாணவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அதனால்தான் தற்கொலை முடிவுகளை உடனே எடுக்கிறார்கள். இதனைச் சரிசெய்ய வாழ்வியல், மனநல பாடங்களை சொல்லித்தருவது மிகவும் அவசியம். ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று ஆராய்ச்சி செய்வதைவிட, மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், மனதளவில் அதற்கு அவர்கள் தயாராவதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும். வாழ்வியல் பாடங்கள் சரியாக சொல்லிக்கொடுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மன அழுத்தம் என்ற வார்த்தையே வராது' என்றார்.

    மனநல வகுப்புகள்

    ஆதம்பாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி சங்கீதா சிவானந்தன் கூறும்போது, 'இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். தோல்வியே வெற்றிக்கு அடிப்படை கல் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. பத்திரிகைகளில் பார்த்தால் தேவையில்லாத அர்ப்ப காரியங்களுக்குக்கூட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. செல்போன் பேசுவதை கண்டித்தாலோ, அதை வாங்கித்தராவிட்டாலோ தற்கொலை எண்ணத்துக்கு போவது மிகுந்த கவலை அளிக்கிறது. அந்த காலங்களில் நன்னெறி வகுப்புகள் இருந்தன. பள்ளிக்கூட மாணவர்களை திருத்தி, நல்ல பாதையில் கொண்டு சென்றன. இப்போது அவர்களின் மனநலத்தையே மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், மனநல ஆசிரியர்கள் நியமிப்பதும், மன நல வகுப்புகள் நடத்துவதும் காலத்தின் கட்டாயம் ஆகும்' என்றார்.

    அவசியம்

    கல்வி செயற்பாட்டாளர் உமா கூறும்போது, 'மாணவர்கள் தற்கொலையில் முக்கிய பங்கு மாணவர்களிடம் பரவலாக பேசப்படும் காதல் என்ற வார்த்தைக்கு இருக்கிறது. அதைப் பற்றிய சரியான புரிதல் பிள்ளைகளுக்கு இருப்பது கிடையாது. இதனால் பல இடைநிற்றல்கள் கூட நடந்திருக்கின்றன. தேர்வு பயம், செல்போன் பயன்பாடு போன்ற காரணங்களினாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடக்கும் சம்பவமாக இருக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறையால், அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவால், பிள்ளைகளின் மனநிலையை அவர்கள் கவனிப்பது என்பது குறைந்துவிட்டது. ஆனால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்காவது, தனியாக மனநல அறையை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கலாம். ஏற்கனவே மனநல ஆலோசனைகள் தொடர்பாக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மனநல வகுப்புகள் என்பது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றுதான்' என்றார்.

    தவறான செயல்

    ரேகா என்பவர் கூறுகையில், 'மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவது தவறான செயல். பெற்றோருக்கு மனதளவில் பெரிய கஷ்டத்தை கொடுத்துவிடுகிறார்கள். பெற்றோர் ஒவ்வொரு மாணவரின் படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அதனை பிள்ளைகள் மனதில் வைத்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. பெற்றோரும் மாணவர்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது தவறு. பிள்ளைகளுக்கு எப்போது படிக்க வேண்டும்? எப்போது விளையாட வேண்டும்? என்று தெரியும். பிள்ளைகள்-பெற்றோர் இடையே நட்புறவு இருக்கவேண்டும். பிள்ளைகள், பெற்றோரிடம் நண்பனாக எதையும் தெரிவிக்கவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பிள்ளைகளுக்கு மனநல வகுப்புகளை நடத்தலாம். அது சிறந்ததாகதான் இருக்கும்' என்றார்.

    விழிப்புணர்வு

    தனியார் கல்லூரி மனநல ஆலோசகர் நபிசா ஜெடி கூறும்போது, 'பலதரப்பு பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள். அவர்களுக்கு மனநலம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. மேலும் கல்லூரிகளில் மனநல வகுப்புகள் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை அல்லது 2 முறை நடத்தலாம். அதில் சிறந்த மனநல ஆலோசனை பயிற்சியாளர்களை கொண்டு வகுப்புகள் நடத்தலாம். இதனை விருப்பப் பாடமாக இல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பொதுப்பாடமாக கொண்டு வரவேண்டும். இந்த வகுப்புகளை பள்ளி அளவில் இருந்தே கொண்டு வருவது அவசியமான ஒன்று. 9-ம் வகுப்பில் இருந்து இதற்கு என்று தனிப்பாடம் உருவாக்கி நடத்தி, அவர்களை எதையும் எதிர்கொள்ளும் மாணவர்களாகவும், எளிதில் கடந்து செல்லும் மாணவர்களாகவும் உருவாக்க வேண்டும்' என்றார்.

    Next Story
    ×