search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    ஞானப் பொருளின் அடையாளம் சின்முத்திரை
    X

    ஞானப் பொருளின் அடையாளம் சின்முத்திரை

    • ஆணவம், மாயை, கன்மம், என்னும் மும்மலங்களை குறிப்பனவாகும்.
    • சுட்டு விரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேராது பெருவிரலை தொட்டு நிற்கிறது.

    சின்முத்திரை என்னும் சொற்றொடர் ஞான அடையாளம் எனப் பொருள்படும். சித் ஞானம் முத்திரை அடையாளம், எனவே ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாக திகழ்வது சின்முத்திரை எனலாம்.

    தென்முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தி தம் திருக்கையால் சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரல் சுட்டுவிரலுடன் ஒன்றையொன்று வளைந்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகி தனித்து சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரை ஆகும்.

    நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே, ஆணவம், மாயை, கன்மம், என்னும் மும்மலங்களை குறிப்பனவாகும்.

    நடு விரல் நீண்டு, முனைந்து நிற்பதனால் ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல் மாயா மலத்தை குறிப்பது என்பதனை புலப்படுத்தவே மாயா மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை அதன்கண் நாம் அணிந்து கொள்கிறோம். ஏனைய மலங்களை காட்டிலும் அனுபவித்து தீர்ப்பதனால் விரைவில் அழிந்தொழிந்து போகும் தன்மையது கன்ம மலமாதலின் அது சுண்டு விரலால் குறிக்கப்படுவதாயிற்று.

    ஆணவ மலம் நெல்லுக்கு உமியும், செம்பிற் கழிம்பும் போல உயிருள்ள அன்றே தொன்றுதொட்டு இருந்து வருவது ஆதலின் அது சகசமலம் எனப்படும், ஏனைய மாயா கன்ம மலங்கள் உயிருக்கு இடையில்வந்து சேர்வனவாதலின் ஆகந்துக மலம் எனப்படும். இவ்வுண்மையினையும் இவ்விரல்களின் வரிசை முறை தெரவிப்பதாக உள்ளது.

    பெருவிரலின் உதவியின்றி நாம் எதனையும் எடுத்து பிடித்தல் முதலியன செய்தல் இயலாது, ஆதலின் அது சின் முத்திரையில் பதியினைக் குறிக்கிறது. சுட்டு விரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேராது பெருவிரலை தொட்டு நிற்கிறது. அது பசு எனப்படும்.

    கட்டை வரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது முத்தி நிலையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது. உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பகளிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின் மும்மலங்களின் தொடர்பை விட்டு பதிப் பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டு விரல் தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களை பிரிந்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக்கொண்டிருக்கிறது. சின் முத்திரை விளக்கும் இந் நுண்பொருள் உண்மையினை உணர்த்துகிறது.

    Next Story
    ×