search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சிறுதானிய உணவுகளை தினமும் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராதா?
    X

    சிறுதானிய உணவுகளை தினமும் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராதா?

    • அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.
    • சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது தான் இந்த சிறுதானிய உணவுகளாகும். ஆனால் இன்று நாம் தான் நாகரீகம் என்ற பெயரில் பிட்சா, பர்கர் என்று மேலை நாட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டோம்.

    கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும்.

    சிறுதானியங்களில் அதிகமான அளவு நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடைய கிளைசீமிக் இன்டக்ஸ் மிகக் குறைவு. கிளைசீமிக் இன்டக்ஸ் என்பது ஒரு உணவை சாப்பிடும்போது எவ்வளவு வேகமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறதோ அதன் குறியீடு தான் கிளைசீமிக் இன்டக்ஸ். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, நாம் சாப்பிட்ட உடனே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கப்படுகிறது.

    மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறுதானியங்களை தினமும் உட்கொள்பவர்களுக்கு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 12 சதவிகிதம் குறைவதாகவும், உணவுக்குப் பின் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 15 சதவிகிதம் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    அதனால் சிறு தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சர்க்கரை நோய் வருவதை தாமதப்படுத்தலாம். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.

    சிறுதானியங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.

    இந்த சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் இருதய நோய் பாதிப்புகள் குறைகிறது. சரும பிரச்சனைகள், முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை வருவதை தடுக்கவும் இந்த சிறுதானியங்கள் உதவுகின்றன. மொத்தத்தில் இந்த சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அழகினை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. இவை உங்களுக்கு அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    சிறுதானியங்களில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இது இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இந்த சிறு தானியங்களில் கால்சியம் உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.

    Next Story
    ×