search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்?
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்?

    • கால்களில் அதிகப்படியான திரவ சேகரிப்பால் கால்களில் வீக்கம் (எடிமா) ஏற்படுகிறது.
    • நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்.

    உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு நோய். இன்சுலின், நமது உடலில் உள்ள குளுகோஸை ஆற்றலாக மாற்ற உதவும். அது நடக்க தவறும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.

    கால்களில் அதிகப்படியான திரவ சேகரிப்பால் கால்களில் வீக்கம் (எடிமா) ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் பலருக்கு பெரிபிரல் வாஸ்குலர் நோய் இருப்பதால் ரத்த ஓட்டம் குறைந்து கால் வீக்கத்தை உண்டாக்கலாம். கூடுதலாக வேறு நோய்கள் இருக்கும்போது கால் வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, தைராய்டு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், உட்கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் ஆகியவற்றால் கால் வீக்கம் ஏற்படலாம்.

    நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவர்கள், வயதான பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பொதுவாக கால் வீக்கம் காரணமின்றி ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

    பாதங்களை இதயத்தின் மட்டத்தை விட அதிகமான அளவில் உயர்த்தி வைத்திருத்தல். இதனால் ரத்தக்குழாயின் (வெயின்ஸ்) அழுத்தம் குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

    உடற்பயிற்சி செய்தல்: இது ரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் (லிம்ப்) ஓட்டத்தையும் அதிகரிக்க செய்து வீக்கத்தை குறைக்கிறது.

    அதிக உடல் எடை இருந்தால் அதை குறைக்க வேண்டும்.

    உணவில் உப்பின் அளவை ஒரு நாளைக்கு 2000 மில்லி கிராமுக்கு குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மெக்னீசியம் அளவை பரிசோதனை செய்யுங்கள். ஏனெனில் சில சமயம் மெக்னீசியம் குறைபாட்டால் கால் வீக்கம் ஏற்படலாம்.

    வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாக இது இருந்தால் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து மருந்துகளை மாற்றிக்கொள்ளலாம்.

    இவை தவிர இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றால் வீக்கம் ஏற்படும் போது அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் காண்பித்து அவர்களின் பரிந்துரைப்படி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

    இம்முயற்சிகள் அனைத்தும் பயனளிக்காவிடில் உங்கள் மருத்துவர் டையூரிட்டிக் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, அது உடலில் உள்ள தேவையற்ற நீரை அகற்றி வீக்கத்தை குறைக்க உதவும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    Next Story
    ×