search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலியா....உஷார்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலியா....உஷார்!

    • பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும்.
    • மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும்.

    பொதுவாக தலைவலி சர்க்கரை நோயின் அறிகுறியாக இல்லாவிட்டாலும் அதை உதாசீனப்படுத்த கூடாது. பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும். தலைவலியே முதன்மை நோயாக வருவது பிரைமரி தலைவலி (மைக்ரேன், கிளஸ்டர் தலைவலி) ஆகும்.


    வேறொரு நோயின் வெளிப்பாடாக ஏற்படுவதை செகண்டரி தலைவலி என்று கூறுகிறோம். செகண்டரி தலைவலி ஏற்பட முக்கிய காரணங்களாக கீழ்க்கண்டவை கருதப்படுகின்றன.

    நீரிழிவு நோய், ரத்த நாளங்கள் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சைனஸ் பிரச்சினை, நோய் தொற்று, மன அழுத்தம், போதை பழக்கம், கண் ஒளி விலகல் பிழை, செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ் (கழுத்து எலும்பு தேய்மானம்).

    பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் எபிநெப்ரின் மற்றும் நார்எபிநெப்ரின் போன்ற ஹார்மோன் அளவுகளின் மாற்றங்கள், தலைவலியை உண்டாக்குகிறது.

    ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, சிறுநீர் அதிகம் வெளியேறி, நீரிழப்பு ஏற்பட்டுவதாலும், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளாலும் தலைவலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் தலையின் பின்பகுதியில் வலியை ஏற்படுத்தும்.


    ரத்த சர்க்கரை அளவு குறையும்போது மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும். இது தலையின் வலது அல்லது இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும்.

    அதுமட்டுமில்லாமல் சில பொதுவான காரணங்களாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தலைவலி ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தலைவலி வரலாம்.

    சிலருக்கு தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கத்தால் தூங்கி எழுந்தவுடன் தலைவலி ஏற்படும். மேலும் சிலருக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மது, குளிர்பானங்கள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி தலைவலியை தூண்டலாம்.


    இதற்கு தீர்வாக கீழ்க்கண்ட வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.

    1) சரியான நேரத்தில் தூங்குதல்

    2) சரியான நேரத்தில் உணவு அருந்துதல்

    3) புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழித்தல்

    4) அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்தல்

    5) ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்

    6) காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகமுள்ள ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுதல்

    7) தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்தல்

    8) நீரிழப்பை தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை உடனே கலந்தாலோசித்து தகுந்த பரிசோதனைகளை செய்து என்ன காரணத்தினால் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

    Next Story
    ×