search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நோய் ஏற்படுத்தும் மாற்றங்கள்
    X

    நோய் ஏற்படுத்தும் மாற்றங்கள்

    • உடலும், மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நோய்தான்.
    • மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும்.

    நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்யவிடாமல் உடலும் மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நமக்கு நோய்தான். எல்லோருக்குமே தங்களுடைய அன்றாட வழக்கங்கள் பாதிக்கப்படும்போது டென்ஷன் வந்துவிடுகிறது.

    உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளைச் சாப்பிட்டு, ஊசிகளைப் போட்டு உடனே உடல் குணமாகி, உடனே நம்முடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோருடைய விருப்பமாக இருக்கிறது.

    நோய் என்றால் நம்முடைய மன, உடல் இயக்கத்தில் ஏற்படுகிற மாறுதல். உதாரணத்துக்குப் புகை, தூசு, மாசு மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும்போது, நம்முடைய உடலுக்கு ஒவ்வாத மேற்கண்ட விஷயங்களால் சுவாச பாதையில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது.

    நுரையீரலில் இவை சேர்ந்துவிடாமல் இருக்க, நுரையீரல் ஒரு கணம் தன் முழு சக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அதையும் மீறிச் சுவாசப் பாதையில் நுழையும் ஒவ்வாத அந்நியப் பொருட்களை வெளியேற்ற சளிச் சவ்வுகளைத் தூண்டிவிட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது

    இதன்மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க தானாகவே உடல் முயற்சிக்கிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும், இந்த உணர்வு வரும். இது ஆரம்பக்கட்டம். சுவாச உறுப்புகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிட்டால், அதை அந்தந்த இடத்திலேயே சளிநீரானது சிறைப்படுத்துகிறது. பின்பு இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது. கூடவே சிறைபட்ட அந்த பொருளும். அதாவது அந்த தூசு, மாசு, எல்லாமும் வெளியேறுகின்றன.

    அதேபோல மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் நியாயமில்லாத காரணத்துக்காக, ஒருவர் வாங்கும் ஏச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனாலும் நலம் பாதித்து உடல் நடுக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மனரீதியான பாதிப்பால் வரும் நோய்களுக்கு இதுபோல் பல உதாரணங்களை கூறமுடியும்.

    ஆக நோய் என்பது ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவது ஆகும். மொத்தத்தில் நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் தொகுப்பு என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    Next Story
    ×