என் மலர்
பொது மருத்துவம்

அத்திப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையுமா?

- மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
- இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்பு சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.

அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நார்ச்சத்து ஆகியவை இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
அத்திப்பழம் 35 என்ற மிகக்குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுத்தும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்கள் வராமலும் தடுக்க துணை புரிகிறது.
மேலும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் பிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கின்றன.

மேலும் ஆன்டி ஆக்சிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுசேர்க்கிறது.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்கள் சாப்பிடலாம். ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்னரே அத்திப்பழங்களை சாப்பிடவேண்டும். இத்தகைய நன்மைகள் நிறைந்த அத்திப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளலாம்.