search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகள்!
    X

    மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகள்!

    • சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும்.
    • தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல.

    அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் சில தவறான பழக்கங்கள் 'ஸ்லோ பாய்சன்' எனப்படும் மெதுவாக கொல்லும் விஷம் போல செயல்பட்டு படிப்படியாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் பற்றியும் பார்ப்போம்.


    மன அழுத்தம்

    எப்போதாவது மன அழுத்தத்திற்கு ஆளாவது பிரச்சனையில்லை. ஆனால் தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. அது நாள்பட்ட மன அழுத்தமாக மாறினால் ஆபத்தானது. ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' எனப்படும் அமைதியான கொலையாளியோடு தொடர்புடையது.



    உடலையும், மனதையும் படிப்படியாக சோர்வடையச் செய்துவிடும். நாளடைவில் மன அழுத்தம் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.


    நலம் விரும்பிகள் இல்லாத நிலை

    நம் நலனில் அக்கறை கொள்பவர்களும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எதிர்மறையான விஷயங்கள், கருத்துக்களை பேசுபவர்களுடன் பழகுவதோ, அவர்களுடைய ஆலோசனையை கேட்டறிவதோ நம்மை பலவீனமாக்கும்.

    குறிப்பாக உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள், உங்கள் சாதனைகளை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள், தேவையற்ற எண்ணங்களை உங்களிடத்தில் விதைப்பவர்கள், எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.


    துரித உணவு

    துரித உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால் தொடர்ந்து அதனை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த உணவுகளில் பெரும்பாலும் கொழுப்புகள், சோடியம், சர்க்கரை அதிகமாக இருக்கும். அவை மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய்க்கு வித்திடும்.


    வேலையில் நாட்டமின்மை

    எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். வேலையை வெறுப்பது, விருப்பமின்றி செய்வது உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அதிருப்தி, தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்படும். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷமாக மாறும்.


    உணர்ச்சிகளை அடக்குதல்

    நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் திடீரென்று எதிர்மறையாக நடந்து கொள்ளும்போது கடும் அதிருப்தி உண்டாகும். அந்த சமயத்தில் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வது மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.

    ஆனால் தொடர்ந்து உணர்ச்சிகளை அடக்குவது, மனதில் பதிந்திருக்கும் ஆழ் மனக்கவலைகளை வெளிக்காட்டாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலப்போக்கில் உடலையும், மனதையும் பாதிக்கும் நோயாக மாறிவிடும். எனவே உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.


    தொடர்ந்து கவலையாக இருத்தல்

    தொடர்ந்து கவலையாகவோ, பதற்றமாக இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். தொடர்ந்து கவலைப்படுவது மன அழுத்தத்தை தூண்டிவிடும். அதனால் கார்டிசோல் ஹார்மோனின் அளவு உயர்வதற்கு வழிவகுக்கும்.

    நாளடைவில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பு மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் எடை அதிகரிப்புக்கும், நோய் எதிர்ப்பு தன்மை பலவீனமடைவதற்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் காரணமாகிவிடும்.


    சோர்வாக காட்சி அளித்தல்

    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தொடர்ந்து சோர்வுக்கு ஆளாகுவது மனச்சோர்வு, நாள்பட்ட சோர்வு மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    இதற்கு இடம் கொடுக்காமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியான மன நிலையை உங்கள் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    காலை உணவைத் தவிர்த்தல்

    காலை உணவுதான் அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    Next Story
    ×