search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆரோக்கியம் தரும் பனங்கிழங்கு!
    X

    ஆரோக்கியம் தரும் பனங்கிழங்கு!

    • பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
    • கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

    பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்கு. கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தருகிறது. அதில் பனங்கிழங்கும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பனை உணவாக திகழ்கிறது.

    உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் பனங்கிழங்கு, கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரத்தில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. இது மருத்துவ குணமும் கொண்டது. இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகையை போக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


    இதில் பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரியான செரிமானத்தை உறுதி செய்கிறது.

    நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை பிரச்சினையை குறைக்கிறது.

    பனங்கிழங்கில் கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியைக் குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

    மெக்னீசியம் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது. அத்துடன் நரம்பு பலவீனம், நரம்புகளில் உள்ள அடைப்புகளையும் நீக்குகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கிறது.

    இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள பாதுகாப்பான வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே, பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    பெருங்குடலில் அசுத்தங்கள் சேராமல் தடுக்கிறது. நச்சுக்களை நீக்குகிறது. பனங்கிழங்கில், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்..

    மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது குறையும்.


    தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் கண்டிப்பாக வழங்கப்படும். இதற்காக பெரும்பாலானோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பனை மரத்தில் இருந்து விழும் பனம்பழத்தை தனித்தனியாக பிய்த்து எடுத்து மண்ணில் புதைத்து வைப்பார்கள். ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பனங்கிழங்கை தோண்டி எடுத்து தங்களது பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இடவசதி இல்லாதவர்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பனங்கிழங்குகளை வாங்குவார்கள்.

    நெல்லை, தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் பனங்கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பணகுடி, திசையன்விளை, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சேர்ந்தமரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, எட்டையபுரம் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    தற்போது நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை சமாதானபுரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.120-க்கும், 25 கிழங்குகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.150-க்கும் விற்கப்படுகிறது.

    பனங்கிழங்கு விளைச்சல் அடைந்த பிறகு அதோடு இணைந்த விதையை உடைத்தால் அதற்குள் கெட்டியான கேக் போன்ற உணவுப் பொருள் இருக்கும். அது தவுன் என்று அழைக்கப்படுகிறது. இதையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர்.

    Next Story
    ×