என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
மூளை எப்படி இயங்குகிறது, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்
- மூளை மனதின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு.
- நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன.
வெறும் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட மூளைதான், 60 கிலோ எடை கொண்ட மனிதனையே இயக்குகிறது. அதே மூளைதான், மனிதர்களை திறமைசாலிகளாகவும், புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் மாற்றுகிறது. இதற்கு எதிர்மறையான விளைவுகளையும் மூளையே உண்டாக்குகிறது.
இத்தகைய மூளை, எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கப்பெற்றும், ஒவ்வொருவரின் திறமைகளும், புத்திக்கூர்மையும் ஏன் மாறுபடுகிறது என்ற கேள்வி, எல்லோர் மனதிலும் எழும். இந்த கேள்விக்கு சுவாரசியமான பதில் இருக்கிறது.
ஆம்..! மனித மூளை என்பது உடல் மற்றும் மனதின் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு. அது பெருமூளை, சிறுமூளை, மூளைத்தண்டு, தலாமஸ், ஹைபோதலாமஸ்... என பலவற்றை ஒருங்கிணைத்து இயங்குகிறது. இவை ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு செயல்பாடுகளை கொண்டுள்ளன. அதன் செயல்பாடுகளை, வேறு எதன் மூலமாகவும் ஈடுசெய்ய முடியாது. இதில் ஏதாவது ஒன்று முழுமையாக செயல்படாத பட்சத்தில்தான், மனிதர்களின் மூளைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.
நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன. அதன் அடிப்படையில்தான், குழந்தைகளை நாம் நன்றாக படிப்பவர்கள், படிக்க சிரமப்படுபவர்கள் என தரம் பிரிக்கிறோம்.
சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே, மூளைத்திறன் குறைவாக இருக்கும். ஆனால் சில குழந்தைகள், டிஜிட்டல் உலக மோகத்தினாலும், ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அவர்களுக்கு போதிய நினைவாற்றல் இருக்காது. குழப்பமாகவே காணப்படுவார்கள். சிந்தனை திறனும், ஞாபக சக்தியும் அதிகமாக இருக்காது. இது தீர்வு காணக்கூடிய சிக்கல்தான். ஏனெனில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும் என்பதால், சில பயிற்சிகள், விளையாட்டு முயற்சிகள் மூலமாக மூளைத்திறனை மேம்படுத்த முடியும்.
இந்த முயற்சிகள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை தூண்டி, அவர்களின் நினைவாற்றலையும், புத்திக்கூர்மையையும் செம்மையாக்க உதவுகின்றன.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை எவ்வாறு தூண்டுவது?, விளையாட்டு பயிற்சிகள் மூலமாக குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த முடியுமா?, ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?, மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் எவை?, சிக்கல்களை சமாளிக்க குழந்தைகளை பழக்குவது எப்படி?... இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்கு முன்பாக மூளை எப்படி இயங்குகிறது, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கமாக அறிந்து கொள்வோம். இது, நம்முடைய புரிதல் திறனை வலுவாக்கும்.
மனித மூளையின் செயல்பாடுகள்
பெருமூளை
பெருமூளைதான் மூளையின் மிகப்பெரிய பகுதி. சிந்திப்பது, முடிவெடுப்பது, மொழி அறிவு மற்றும் தன்னார்வ இயக்கம் போன்ற உயர்மட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை சிறப்பாக செய்யக்கூடியது. நான்கு வகையான மடல்கள் இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.
1. ப்ரண்டல் லோப்- தன்னார்வ இயக்கம், முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
2. பாரிட்டல் லோப்- தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உள்ளிட்ட உடலில் இருந்து உணர்ச்சி தகவல்களை செயலாக்குகிறது.
3. டெம்போரல் லோப்- செவி வழி தகவல், நினைவகம் மற்றும் மொழி புரிதல் ஆகியவற்றை செயலாக்குகிறது.
4. ஆக்ஸிபிடல் லோப்- கண்கள் காணும் காட்சிகளை தகவல்களாக மாற்றுகிறது.
சிறுமூளை
அடுத்தது, சிறுமூளை. உடல் இயக்கம், சமநிலை, தோரணை மற்றும் செம்மையான இயக்க திறன்களை இது ஒருங்கிணைக்கிறது. `பைன் மோட்டார் ஸ்கில்ஸ்' என்பது, எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல், கத்தரித்தல், கைத்தட்டுதல், பல் துலக்குதல், ஷூ கயிறு கட்டுதல், புத்தகம் திருப்புதல்... போன்ற உடலுக்கு தேவையான செம்மையான இயக்கங்களை குறிக்கும்.
மூளைத்தண்டு
மூன்றாவதாக, மூளைத்தண்டு. இது அடிப்படை உயிர் காக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. மூளையை முதுகெலும்புடன் இணைக்கிறது. சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், செரிமானம் மற்றும் விழுங்குதல் போன்ற தன்னிச்சையான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இது மூளைக்கும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான உணர்ச்சி மற்றும் இயக்க சமிக்ஞைகளுக்கான பாதையாகவும் செயல்படுகிறது.
தலாமஸ்
தலாமஸ் என அழைக்கப்படும் இது உணர்வு தகவல்களை பரிமாற்றும் 'ரிலே' (அஞ்சல்) நிலையமாக செயல்படுகிறது. உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்படும் உணர்வுகளை (வாசனையைத் தவிர) ஆராய்ந்து, அதை பெருமூளையின் வெளிப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. நாம் தூங்கும்போதும், சுயநினைவின்றி இருக்கையிலும் இந்த தலாமஸ் இயங்கிக்கொண்டே இருக்கும்.
ஹைபோதலாமஸ்
இது மூளைக்குள் இருக்கும் ஆழமான பகுதி. இது உடல் இயக்கத்தின் `ஸ்மார்ட்' ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும். உடல் மற்றும் மூளை நரம்பு செல்கள் மூலமாக பகிரப்படும் ரசாயன சமிக்ஞைகளை உள்வாங்கி, உடல் இயக்கத்தை சம நிலையாக பராமரிப்பது இதன் முக்கிய வேலை.
இப்படி மூளையின் பல்வேறு பகுதிகள் பல்வேறு பணிகளை செய்கிறது. அவை சரிவர நடைபெறாத போதும், மூளை திறன் குறையும் போதும் ஞாபக மறதி, குறைந்த புரிதல் திறன், சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறுதல்... போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல, ஒருசில பயிற்சிகள், விளையாட்டுகளால் மூளைத்திறனை சிறப்பாக மேம்படுத்தி, அதீத நினைவாற்றல் பெற முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்