search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    வாதம், பித்தம், கபம் இவற்றை கட்டுப்படுத்த உதவும் சமையலறை உணவுப் பொருட்கள்
    X

    வாதம், பித்தம், கபம் இவற்றை கட்டுப்படுத்த உதவும் சமையலறை உணவுப் பொருட்கள்

    • சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
    • மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.

    வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். இவை முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.


    நோய்க்கு தரப்படுகின்ற சித்த மருந்துகள் வாத, பித்த, கப நிலையை சமன் செய்து உடம்பை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. முத்தோடங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் குணமடைகிறது.

    இந்த திரிதோடத்தை சமன் செய்ய ஏலம், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவை உதவுகின்றன. இவை அனைத்தும் நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும். இவற்றை அன்றாடம் முறையாக பயன்படுத்தும் போது முத்தோடங்களும் உடம்பில் சமச்சீராக இருக்கும்.


    சுக்கு

    இது கார்ப்பு சுவை உடையது. செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்கவும். இஞ்சியாகவும் இதை பயன்படுத்தலாம்.


    மஞ்சள்

    இது கசப்பு, கார்ப்பு சுவைகளை உடையது. சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதை இனிப்பு பண்டங்களைத் தவிர மற்ற எல்லா உணவிலும் சேர்க்கலாம்.


    மிளகு

    காரத்தன்மை உள்ள இதன் நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் அலாதியானது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மிளகாய்க்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது நல்லது.


    பூண்டு

    வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும்சமநிலைப்படுத்த உதவுகிறது. பருப்பு மற்றும் கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.


    சீரகம்

    சிறிது கார்ப்பு சுவையுடைய இது, உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது. காரமான உணவு வகைகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.


    ஏலக்காய்

    சிறிது கார்ப்பு, இனிப்பு சுவையுடையது. இது செரிமானத்திற்கு உதவும், உடல் வெப்பத்தை தணிக்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இனிப்புகள் மற்றும் இறைச்சி சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.


    பெருங்காயம்

    கார்ப்பு, கசப்பு சுவைகளை உடையது. செரிமானத்திற்கு உதவும் இது, வாயு, வயிற்றுப் பொருமல், வயிறு எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். கிழங்கு, பருப்பு வகைகள் சமைக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும்.


    வெந்தயம்

    இரும்பு போன்று உடலை உறுதியாக்கும் இது, கசப்பு சுவையுடையது. உடலில் பித்தத்தை நீக்கும். வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. காரமான உணவுகளை சமைக்கும் போது இதை சேர்க்கவும்.

    Next Story
    ×