search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சுகாதாரத்தை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்
    X

    சுகாதாரத்தை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்

    • தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
    • ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம்.

    தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.

    இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொற்றுநோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம். நாம் சுத்தமாக இல்லாவிடில் நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோஷமான மனிதனின் வெற்றியின் ரகசியம் ஆகும்.

    சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதால் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை உண்டாக்கி வாழ்வை இருளாக்கிவிடும்.

    நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கிற குடும்பம் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் உளரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும். வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம்.

    சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் தொடர்பானதாகும். ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ணவேண்டும். சாப்பிடும்போதும் உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகும், சுகாதார வளாகத்தை பயன்படுத்திய பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    குழந்தைகளிடம் கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி திரவத்தை பயன்படுத்தி கழுவுவதற்கு கற்று கொடுக்க வேண்டும். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    நம் உடல்நலத்தில் நாம் உடுத்தும் ஆடைகளுக்கு பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாக துவைத்த ஆடைகளை அணியவேண்டும். உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்க வேண்டும்.

    உணவு தயாரிப்பதற்கு முன்பும், உணவுப்பொருட்களை தொடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக கழுவவேண்டும். கடைகளில் சாப்பிட நேரும்போது தரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் அவசியத்தை குழந்தைகளுக்கு விளக்கி கூறவேண்டும். ஆரோக்கியமான வாழ்வை வாழ அனைவரும் கற்று கொள்வோம்.

    Next Story
    ×