search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மழைக்கால காய்ச்சல்- தவிர்க்கும் வழிமுறைகள்
    X

    மழைக்கால காய்ச்சல்- தவிர்க்கும் வழிமுறைகள்

    • உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.
    • உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நமது உடலில் சராசரியாக இருக்கவேண்டிய வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இருப்பினும், வெளிப்புற தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்ப அளவு மாறும். நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் வேலையை மூளையின் அடிப்பகுதியிலுள்ள 'ஹைப்போதலாமஸ்' என்கிற உறுப்பு கவனித்துக் கொள்கிறது.

    நமது உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகள், வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழிக்க உடலில் உற்பத்தியாகும் 'ப்ராஸ்டோக்ளாண்டின்' என்கிற திரவம் உடலின் வெப்பநிலையை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகப்படுத்திவிடுகிறது. இதைத் தான் நாம் பொதுவாக 'காய்ச்சல்' என்கிறோம். மழைக்காலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பிற வைரஸ் கிருமிகள் தாக்குதல்களால் காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகமாக காணப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.

    உங்களுக்கு நோய்கிருமி தாக்குதல் இருந்தால் அதை எதிர்க்கும் வேலையை உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி அமைப்பு உடனே செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது காய்ச்சல் காணப்படும். உடல் சூடு 103 டிகிரியை தாண்டிவிட்டாலே உடல் முழுவதும் சோர்வு, அசதி, குழப்பம், பேச்சு குளறுதல், நாக்கு-உதடு வறண்டு போதல், உடல் இயக்கங்களில் மாற்றம், மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

    காய்ச்சலைக் கண்டு பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். இந்த நேரத்தில் குளிப்பது கூடாது. சாதாரண தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து உடல் முழுக்க நான்கைந்து முறை ஒத்தடம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களுக்கு மேலும் இருக்கிறது என்றால் குடும்ப டாக்டரைச் சந்தித்து ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    சாதாரண காய்ச்சலா, விஷக்காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என எந்தக் காய்ச்சல் தாக்கியுள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உடனே சிகிச்சை பெறுவது நல்லது.

    Next Story
    ×