search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    டெங்கு காய்ச்சல் பற்றிய கட்டுக்கதைகள்
    X

    டெங்கு காய்ச்சல் பற்றிய கட்டுக்கதைகள்

    • டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன.
    • குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும்.

    பருவ காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கொசுக்கள், உற்பத்திக்கும், கொசுக்களால் பரவும் நோய்களுக்கும் வழிவகுத்துள்ளது. பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1: பப்பாளி இலைச் சாறு டெங்குவை குணப்படுத்தும். ஆட்டு பால், பப்பாளி இலைகள் மற்றும் கிலோய் சாறு உட்கொள்வதன் மூலம் ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

    உண்மை: இவற்றை உட்கொள்வது ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை சிறிதளவு உயர்வதற்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதற்காக பப்பாளி இலை சாறு உள்ளிட்ட வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பியிருப்பது சரியான சிகிச்சைமுறை ஆகாது.

    டெங்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இவை ஓரளவுக்கு கைகொடுக்கும். ஆனால் டெங்கு நோயாளியின் பிளேட்லெட்டுகள் திடீரென வீழ்ச்சி அடைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப் பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதே பலனளிக்கும்.

    கட்டுக்கதை 2: முதியவர்கள், குழந்தைகள், கருமை நிறம் கொண்டவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    உண்மை: இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் நம்பிக்கை இது. ஆனால் வயது, பாலினம், தோல் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படாது.

    அத்தகைய பாகுபாட்டை டெங்கு கொசு காண்பிக்காது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக முதியவர்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்பை உண்டாக்கலாம்.

    இதை தவிர வேறு காரணம் இல்லை. வயது, பாலினத்தை பொருட்படுத்தாமல் எவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகலாம். டெங்குவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது.

    கட்டுக்கதை 3: டெங்கு கொசுக்கள் கருமையான, அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிபவர்களையே கடிக்க விரும்புகின்றன.

    உண்மை: நிறங்களால் கொசுக்கள் ஈர்க்கப்படுவது உண்மைதான். கருப்பு, சியான், ஆரஞ்சு, சிவப்பு போன்ற அடர் நிறங்களை கொண்ட ஆடைகளுடன் சுவாசத்தின்போது வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடு வாயு, உடல் வெப்பம் போன்றவை டெங்குவை பரப்பும் கொசுக்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றன.

    அதற்காக வெளிர் நிற ஆடை அணிபவர்களை கொசுக்கள் கடிக்காது என்பதல்ல. கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருப்பதை தவிர்ப்பது, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது பயனுள்ள தற்காப்பு நடவடிக்கைகளாக அமையும்.

    கட்டுக்கதை 4: ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவார். அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இதில் துளியும் உண்மை இல்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகலாம்.

    டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்குவதால் எளிதில் டெங்கு பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொசு கடிப்பதை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    கட்டுக்கதை 5: ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இவை இரண்டுமே வைரஸ் வகை நோய்கள். அதனால் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவரை தாக்காது என்று கூற முடியாது.

    கொரோனா காலகட்டத்தில் இரண்டு நோய்த்தொற்றுகளாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே டெங்கு, கொரோனா இரண்டையும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

    குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வைக்கும் உணவுகளை உட்கொள்ள செய்ய வேண்டும்.

    டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியோ, லேசான டெங்கு பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இல்லை. லேசான டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

    கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, வேகமாக சுவாசிப்பது, ரத்தப்போக்கு ஏற்படுவது, சோர்வு, சருமம் வெளிர் நிறத்துக்கு மாறுவது, தூக்கமின்மை, வாய், நாக்கு உலர்வடைவது, நீரிழப்பு ஏற்படுவது, சிறுநீர் கழிப்பது குறைவது போன்ற அறிகுறிகள் நிலைமையை மோசமாக்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு அறிகுறி கடுமையாக வெளிப்பட்டாலே உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமானது.

    Next Story
    ×