search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உணவு முறை குறித்து நம்ப வைக்கும் கட்டுக்கதைகளும்.. உண்மையும்..!
    X

    உணவு முறை குறித்து நம்ப வைக்கும் கட்டுக்கதைகளும்.. உண்மையும்..!

    • பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன.
    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை.

    உடல் ஆரோக்கியத்தை சீராக பேணுவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவு, ஊட்டச்சத்து விஷயத்தில் சரியான புரிதலின்றி செயல்படுகிறார்கள். அதனால் அவை சார்ந்த கட்டுக்கதைகளும் ஏராளம் உலவுகின்றன. அவற்றுள் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.

    கட்டுக்கதை 1 : காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்.

    உண்மை: காலை உணவு முக்கியமானதுதான். அதனை தவிர்ப்பது நல்லதல்ல. அதேவேளையில் காலை உணவு சாப்பிடாவிட்டால் மதிய உணவை அதிகமாக சாப்பிட தோன்றும், உடல் எடை அதிகரிக்கும் என்பதெற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.

    கட்டுக்கதை 2: நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

    உண்மை: காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடையே நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவிடும். இருப்பினும் நீங்கள் எந்தவகையான நொறுக்குத்தீனி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமானது. அவை ஆரோக்கியமற்றவையாக இருந்தால் உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நொறுக்குத்தீனி வகைகளில் பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் இடம் பெறுவது நல்லது.

    கட்டுக்கதை 3: உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நச்சு நீக்கம் செய்ய வேண்டியது அவசியமானது.

    உண்மை: நச்சு நீக்கம் என்பது கட்டுக்கதை. ஏனெனில் நச்சு நீக்க உணவுகள் பயனுள்ளவை, பாதுகாப்பானவை என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. அவை பெரும்பாலும் அறிவியல் ரீதியாக ஆதரிக்கப்படாத, மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டவை.

    அவற்றை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாதாரண உணவை உட்கொள்ள தொடங்கும்போது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் இயற்கையான நச்சு நீக்க அமைப்புகளுக்கு தீங்குவிளைவிக்கும்.

    கட்டுக்கதை 4: குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.

    உண்மை: குறைந்த கொழுப்பு உணவுகள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்களை உள்ளடக்கி இருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலான உணவுகள் அதிகப்படியான பசி, எடை அதிகரிப்பு உள்பட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்படாத உணவுகள் மற்றும் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்தது.

    கட்டுக்கதை 5: பீன்ஸ் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

    உண்மை: பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன. அவை விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் பீன்ஸை சமைக்கும்போது லெக்டினின் வீரியம் குறையக்கூடும். அத்துடன் பீன்ஸ் நார்ச்சத்து நிரம்பப்பெற்றது. உடல் எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    கட்டுக்கதை 6: சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருளைக்கிழங்கை விட ஆரோக்கியமானது.

    உண்மை: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை. பெரும்பாலானவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட விரும்புகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கும், உருளைக்கிழங்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவைதான். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளடங்கி இருக்கிறது.

    கட்டுக்கதை 7: சிவப்பு ஒயின் இதயத்திற்கு ஆரோக்கியமானது.

    உண்மை: மது பானங்களால் எந்த நன்மையும் இல்லை. எந்த வகை மதுபானமாக இருந்தாலும் அதனை பருகுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், மிதமான அளவு சிவப்பு ஒயின் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தாது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    கட்டுக்கதை 8: முட்டை உட்கொள்வது இதயத்திற்கு நல்லதல்ல.

    உண்மை: புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த சூப்பர் உணவாக முட்டை கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 7 முட்டைகள் வரை சாப்பிடலாம். இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது. முட்டை உட்கொள்வது சில வகை பக்கவாதம் மற்றும் மாகுலர் சிதைவு எனப்படும் கடுமையான கண் நோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    கட்டுக்கதை 9: சமச்சீரான உணவு பழக்கத்துக்கு இறைச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    உண்மை: உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி இறைச்சியை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்தான் பிரதான உணவாக அமைய வேண்டும்.

    Next Story
    ×