search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசி நல்லதா? புழுங்கல் அரிசி நல்லதா?
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசி நல்லதா? புழுங்கல் அரிசி நல்லதா?

    • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.

    நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.

    புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.

    புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.

    இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×