search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கீழ்வாத மூட்டுவலிக்கான அறிகுறிகள், ஆபத்துகள்!
    X

    கீழ்வாத மூட்டுவலிக்கான அறிகுறிகள், ஆபத்துகள்!

    • கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம்.
    • வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது.

    பொதுவாக கால் மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்களால் வீக்கம் அல்லது வலி மூட்டுகளில் ஏற்படுகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    ஆனால் பெரும்பாலும் எலும்பு குருத்தெலும்பு தேய்வால் இரு கால் மூட்டுகளில் வரும் கீல் வாதம் தான் அதிகம். இது வயதானவர்களையும், மகளிரையும் மிக அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.


    காரணங்கள்

    கீல் வாதத்தில் கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலகீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது.

    மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால்வலி, வீக்கம், நடக்கும் போது சொடக்கு விடுவது போன்ற சத்தம் இவற்றை ஏற்படுத்துகிறது.

    வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு கீல் வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஆண்களை விட அதிகம்.

    மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவது இதற்கு முக்கிய காரணமாகும். விளையாடும்போது அல்லது விபத்தினால் ஏற்படும் காயங்கள், கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.


    அறிகுறிகள்

    நடக்கும் போது, தரையில் உட்காரும் போது, நிற்கும் போது, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி அதிகமாக உணரப்படும். காலையில் எழுந்தவுடன் கால் மூட்டுகள் விறைப்பு நிலையில் இருக்கும். இதனால் நடப்பதற்கு சிறிது நேரம் சிரமமாக இருக்கும்.

    கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம். சில வளர்சிதை மாற்ற நோய்கள், நீரிழிவு மற்றும் உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் நிலை (ஹீமோக்ரோமாடோசிஸ்) ஆகியவை கீல் வாத பிரச்சனையை அதிகரிக்கும்.


    தவிர்க்க வேண்டியவை

    உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகள் பயன் தரும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சைவ-அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். கால்மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் வலியைக் குறைக்கவும் பிசியோ தெரபி சிகிச்சை உதவுகிறது. குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது. புளிப்பு சுவை உள்ள உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    Next Story
    ×