search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    வைட்டமின்-டி அதிகரித்தாலும் ஆபத்து
    X

    'வைட்டமின்-டி' அதிகரித்தாலும் ஆபத்து

    • வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.

    இதயம், நுரையீரல், மூளை உள்பட உடல் தசைகளின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளுள் ஒன்றாக வைட்டமின்-டி விளங்குகிறது. மேலும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய ஒளிக்கதிர்கள் மூலம் பெறலாம். போதுமான அளவு வைட்டமின் டி உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறைத்தல், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனச்சோர்வை தடுத்தல், இதய நோய்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், வைரஸ் நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கச்செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடுமையான கொரோனா வைரஸ் தொற்று அல்லது அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைஅடுத்து உடலில் வைட்டமின் டி சத்தை வலுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதுபற்றி பார்ப்போம்.

    உடலில் வைட்டமின் டி அளவு அதிகரித்தால் கால்சியத்தை உறிஞ்சும் அளவும் அதிகமாகும். அதன் காரணமாக பசியின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் உண்டாகும். மார்பு வலி, எரிச்சல், பதற்றம் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

    உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் வைட்டமின் டி அதிகமாகும்போது ரத்தத்தில் கால்சியம் அளவும் அதிகரித்துவிடும். அது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். காய்ச்சல், குமட்டல், வாந்தி அல்லது கடுமையான வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    வைட்டமின் டி அளவு அதிகமானால் ரத்தத்தில் வைட்டமின் கே 2 அளவு குறைந்துவிடும். இதன் முதன்மையான செயல்பாடு எலும்புகளில் கால்சியத்தைப் பாதுகாப்பது தான். வைட்டமின் டி அதிகமாக உட்கொண்டால் அது வைட்டமின் கே 2 வின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். அதனால் எலும்புகளுக்கு பாதிப்பு நேரும். எலும்புகளில் வலி, கடுமையான முதுகுவலி, மூட்டுவலி, எலும்பு முறிவு ஆபத்து, எலும்புகள் உறுதியற்ற தன்மையில் இருப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது ஹைபர்கால்சீமியா பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக இதய துடிப்பு ஒழுங் கற்ற நிலைக்கு மாறிவிடும். மேலும் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது இதயத்தின் தமனிகளில் கால்சியம் படியத்தொடங்கிவிடும். அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

    வைட்டமின் டி அளவு அதிகரிக்கும்போது ரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவும் அதிகரித்துவிடும். அவை ஒன்றிணைந்து படிகங்களை உருவாக்கும். அந்த படிகங்கள் நுரையீரலில் படிவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நுரையீரலின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். அப்படி நேர்ந்தால் இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

    ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகம் சிறுநீரை பிரித்தெடுக்கும் செயலுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதன் காரணமாக கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நீரிழப்பு உண்டாகும்.

    வைட்டமின் டி அதிக அளவு உட்கொள்ளும்போது கணைய அழற்சி பிரச்சினையும் தோன்றும். எடை குறைதல், வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் காய்ச்சல் போன்றவை கணைய அழற்சிக்கு ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக அமையும்.

    உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால் எலும்பு பலவீனம், முடி உதிர்தல், தசை வலி, மனச்சோர்வு, அடிக்கடி நோய்வாய்ப்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய கதிர்கள் மூலம் பெறுவதே நல்லது. அப்படி இருந்தும் வைட்டமின் டி பற்றாக்குறையை சந்திக்க நேர்ந்தால் டாக்டர்களின் பரிந்துரையின் பேரிலேயே மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

    முட்டை, காளான், பால், பாலாடைக்கட்டி, மீன் வகைகளில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும். 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 8.5 முதல் 10 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தேவைப்படும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தினமும் 10 முதல் 20 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தேவைப்படும். இருப்பினும் ரத்த அளவை பராமரிக்க 25 முதல் 100 மைக்ரோ கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம் என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தினமும் அந்த அளவுக்கு வைட்டமின் டி சார்ந்த உணவுகளை உட்கொண்டால் போதுமானது.

    Next Story
    ×