search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இதயத்தில் இத்தனை செயல்பாடுகளா...!
    X

    இதயத்தில் இத்தனை செயல்பாடுகளா...!

    • இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.
    • இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும்.

    உடலில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. தாயின் கருவறையில் கருவானது 5 வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும்.

    கடைசி வரை இந்தத்துடிப்பு நிற்காது. இந்த திசுக்கள் குழாய் வடிவம் அடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதயமானது உருவம் பெறுகிறது. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான்.

    பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.

    ஆனால் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் லேசாக திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். இதை அளிப்பவை வேகஸ், சிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், சிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ்.

    வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால், அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயல் இழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும்.

    ஆனால், அப்போது இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.

    மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தை செயல்படச் செய்கிறது. இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும். மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

    Next Story
    ×