என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
கோடை காலத்தில் இருதய நோயாளிகளுக்கு மருத்துவரின் யோசனைகள்
- வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும்.
- டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது.
கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன்.
அவர் கூறியதாவது:-
வெயில் காலம் இருதய நோயாளிகளுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.
வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உடலில் ரத்த அழுத்தம், பொட்டாசியம், சோடியத்தின் அளவு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மயக்கம், சோர்வு ஏற்படும். அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்.
பொதுவாக இரண்டு வகையான இருதய நோயாளிகள் இருக்கிறார்கள். ரத்தத்தை வழக்கமான அளவில் 'பம்பிங்' செய்யும் இருதய நோயாளிகள் ஒருவகை. இதயத்தின் 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் மற்றொரு வகை. இவர்களில் 'பம்பிங்' திறன் நன்றாக உள்ள இருதய நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் 1.5 லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.
கூடுமானவரையில் டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி அருந்துவதாக இருந்தால், காலையில் எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, மற்ற வேலைகளை தொடங்கலாம். சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.
காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இருதய நோயாளிகள் காலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையவும், அதிக வியர்வையினால் மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு 7 மணிக்கு பிறகு நடைபயிற்சி செல்லலாம். வெயில் காலத்தில் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலை நேர நடைபயிற்சி மிகவும் நல்லது.
காலை வேளை உணவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய் பழங்களும் சாப்பிடலாம். என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளியாக இருந்தால் இவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதியம் 11 அல்லது 12 மணி அளவில் காய்கறி சூப், மோர் அருந்தலாம். சிறந்த நீர்பானம் என்றால், அது மோர்தான், குறைவாக உப்பு சேர்த்து மோர் அருந்துவது மிகவும் நல்லது. மோர் குடிப்பதால் கொழுப்பு அதிகரிக்காது.
இளநீரில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதால் இளநீர் குடிக்கலாம். அதேசமயம், இளநீர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இளநீரை தவிர்க்க வேண்டும். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரையின் அளவு கூடாது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.
கோடை காலத்தில் மதிய உணவில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.
பச்சை காய்கறிகளெல்லாம் 'கிரீன் சிக்னல்' மாதிரி. சாலையில் 'கிரீன் சிக்னல்' விழுந்ததும் நாம் செல்வது மாதிரி, பச்சை நிற காய்கறிகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நல்லது. பீன்ஸ், அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், காராமணி, காலிபிளவர், கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சாதத்தை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் வெயிலை தவிர்க்க முடியும் என்பதோடு, சிறிதுநேரம் தூங்கி எழுந்தால் மாலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
மாலையில் ஏதாவது பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, அவரவர் விருப்பத்துக் ஏற்ப சர்க்கரை இல்லாமல் சிறிது டீ, அல்லது காபி அருந்தலாம்.
இரவில் சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். தூங்கச்செல்வதற்கு 1.30 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவேண்டும்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இருதய நோயாளிகள் காற்றடைக்கப்பட்ட ரெடிமேட் குளிர்பானங்களை அருந்தக்கூடாது. பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.
வெயில் அதிகமாக இருக்கும் போது வீட்டினுள் குளிர்ச்சியான இடத்தில் இருங்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் வெயில் படாத காற்றோட்டமான அறையில் இருக்கவேண்டும். வீட்டுக்கு வெளியே மரத்தின் நிழலிலும் அமரலாம்.
பொதுவாக எல்லா இருதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுமே 3 மாதத்துக்கு ஒருமுறை டாக்டரை சென்று பார்க்க வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ப அவர்கள் மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள் அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.
இந்த யோசனைகள் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி வயதான எல்லோருக்குமே பொருந்தும்.
இவ்வாறு டாக்டர் என்.விஸ்வ நாதன் கூறினார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்