search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    குதிகால் வலி எதனால் ஏற்படுகிறது
    X

    குதிகால் வலி எதனால் ஏற்படுகிறது

    • மாடிப்படி ஏற முடியாது அத்தனை சிரமம்.
    • உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம்.

    தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் `சுள்'ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூட காலை எட்டு வைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்.

    ஆனால், இந்த சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச்செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்த பிரச்சினைக்கு `பிளான்டார் பேசியைட்டிஸ்' என்று பெயர்.

    குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க `பர்சா' எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு `கால்கேனியல்ஸ்பர்' என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

    சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். 30 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது.

    பெற்றோருக்கு வந்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி `வார்ம்அப்' பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

    கரடுமுரடான செருப்புகளை அணிபவர்களுக்கும் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். இன்றைய பெண்களில் பலரும் `ஹைஹீல்ஸ்' செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்த காலணிகள் பாதத்துக்குச்சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

    இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

    Next Story
    ×