search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கழுத்து வலி வருவது எதனால்...?
    X

    கழுத்து வலி வருவது எதனால்...?

    • பொதுவாக 40 வயதில் கழுத்து சவ்வு தேயத் தொடங்கும்.
    • இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது.

    கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கழுத்துவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை தசைகளால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்துவலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டதுதான்.

    கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டி.வி. பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்குச் செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு காரணமாகிவிடும்..

    இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். கழுத்தை எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை எளிதாக குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, பிசியோதெரபி சிகிச்சை போன்றவை பலன் தரும். நோயின் தன்மையை பொறுத்து எலும்பு அல்லது நரம்பு நலச் சிறப்பு மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

    உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கெனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம். இது குணப்படுத்தக் கூடியதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.

    Next Story
    ×