search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன...? வந்தால் என்ன செய்ய வேண்டும்!
    X

    ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன...? வந்தால் என்ன செய்ய வேண்டும்!

    • வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.
    • வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது.

    வெயில் பாதிப்பினால் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு சோர்வு, களைப்பு, மயக்கம் உண்டாகிறது.

    வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் 'வெப்ப பக்கவாதம் வரலாம். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால், மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளை விரைவாக இது சேதப்படுத்தும். சில சூழ்நிலைகளில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

    வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைக்கும் வரை கீழ்க்கண்ட முதல் உதவி அளிக்க வேண்டும்.

    1) பாதிக்கப்பட்டவரை நிழ லான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    2) ஈரமான துணி மூலம் உடலை துடைக்கலாம். குளிர்ந்த நீரை உடலில் தெளிப்பதன் மூலம் வெப்பத்தை தணிக்க வேண்டும்.

    3) வியர்வை மூலம் உடலில் உப்பு சத்து குறைவதால், குளிர்பானங்கள் மற்றும் இழந்த உப்பை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க கொடுக்க வேண்டும்.

    பொதுவாக வெயில் பாதிப்பில் இருந்து உடம்பை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:

    1) வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது, அடிக்கடி முகம், கை.கால்கள் கழுவிக் கொள்ள வேண்டும்.

    2) நைலான். பாலிஸ்டர் போன்ற துணிகளால் செய்த உடைகளை தவிர்த்து பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

    3) மண் பானையில் வெட்டிவேர் போட்டு மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். நா வறட்சி நீங்கும்.

    4) அவ்வப்போது மோர், இளநீர், நுங்கு, பதநீர், நீராகாரம் அல்லது தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் காரமான உணவுகள், அத்துடன் கோழி, நண்டு, இறால் போன்ற உஷ்ணத்தை அதிகப்படுத்தும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    5) எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். நன்னாரி சர்பத், வில்வ பழ சர்பத், பதநீர், இளநீர், கரும்புச் சாறு, தர்ப்பூசணி ஜூஸ், முலாம் பழ ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், சோற்றுக்கற்றாழை ஜூஸ் இவை கோடை வெயிலுக்கு ஏற்ற பானங்கள்.

    6) வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.

    சித்த மருத்துவம்:

    1) உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு நெய் - காலை, இரவு 5 மி.லி. வீதம் சாப்பிடலாம்.

    2) உடல் வெப்பம் நீங்க தலையில் தேய்த்து குளிப்பதற்கு பொன்னாங்கண்ணி தைலம், சந்தனாதி தைலம், கரிசாலை தைலம் இவைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.

    Next Story
    ×