search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    தும்மல் ஏன் ஏற்படுகிறது?
    X

    தும்மல் ஏன் ஏற்படுகிறது?

    • செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும்.
    • ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது.

    காற்றைத் தவிர வேறு எந்த ஒரு அந்நியப் பொருளும் நமது மூக்குக்குள் நுழைந்தால் நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அந்த மறுப்பின் பிரதிபலிப்பு தான் 'தும்மல்'.


    'அலர்ஜி' அதாவது 'ஒவ்வாமை' தான் தும்மலின் மூலகாரணம் ஆகும். சமையற்கட்டு, வாகனங்கள், தொழிற்சாலைகள், சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, கற்பூரம் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் புகை, வீட்டை சுத்தப்படுத்தும் போது வெளிப்படும் தூசு, குளிர்ந்த தரை, கடும்பனி, குளிர்ந்த காற்று, ஒட்டடை இதுபோக எந்த ஒரு பொருட்களிலிருந்தும் வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் உள்பட இன்னும் பல விஷயங்களினால் வெளிவரும் தூசி மூக்கில் பட்டதும் தும்மல் ஆரம்பித்துவிடுகிறது.

    பளிச்சென்ற மிகப்பொிய வெளிச்சத்தை திடீரென்று பார்க்கும்போதும், அதிக அளவில் உணவு சாப்பிட்டு வயிறு முழுவதும் நிரம்பியிருந்தாலும் கூட தும்மல் ஏற்படுவதுண்டு.

    செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும். தும்மலை உண்டாக்கும் காரசாரமான உணவுகளையும், மசாலா உணவுகளையும் தவிர்க்கவும்.

    ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது. பொதுவாக ஆழ்ந்த தூக்கத்தின்போது தும்மல் வருவதில்லை. சில நோய்களில் அதிகப்படியாக நரம்புகளின் தூண்டுதல் இருந்தால் தூங்குபவர் விழித்துக்கொண்டு தும்முவதும் உண்டு.

    ஒரு முறை தும்மும்போது மூக்கின் 2 துவாரங்களிலிருந்தும் சுமார் 40 ஆயிரம் திரவ நுண்துளிகள் சிதறி வெளியே பரவுவதுண்டு. தும்மும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக் கிருமிகள் வெளிவருவதுண்டு.

    அந்த நேரத்தில் வேறு யாராவது நம் எதிரில் இருந்தால் அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். எனவே தும்மும் போது கர்ச்சீப் அல்லது துண்டு கொண்டு முகத்தை மூடிக்கொள்வது நல்லது.


    பலத்த வேகத்துடன் தும்மும்போது சிலருக்கு இரண்டு காதுகளும் அடைத்துக் கொள்வதுண்டு. சில சமயங்களில் தும்மும் போது காது சவ்வு கிழிந்து போதல், தலைசுற்றல், நுண்ணிய ரத்தக் குழாய்கள் வெடித்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே முடிந்தவரை தும்மலைத் தடுக்கக்கூடாது.

    ஜலதோஷம் வந்தாலே உடனே தும்மலும் வந்துவிடும். தும்மலோடு ஜலதோஷம், மூச்சுத்திணறல், வாந்தி, கண் எரிச்சல், தொண்டை கட்டிக் கொள்ளுதல், காய்ச்சல் முதலியவை இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

    உங்களுக்கு எது 'அலர்ஜி' என்பதை ஓரளவு கண்டுபிடிக்க 'ஒவ்வாமை பரிசோதனைகள்' என்று ஒரு பரிசோதனை இருக்கிறது. உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் அந்தப் பரிசோதனைகளை செய்து அலர்ஜி பொருள் எது என்பதைக் கண்டுபிடித்து அதை அறவே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

    Next Story
    ×