search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வருமானம் தரும் ப்ரீமிக்ஸ் உணவு
    X

    வருமானம் தரும் ப்ரீமிக்ஸ் உணவு

    • பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம்.
    • இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியம்.

    சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி. பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது, இல்லத்தரசிகள் இந்த பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம். அது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 3 கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முந்திரி- 20

    பச்சை மிளகாய் - 4

    கறிவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    அடிகனமான அகன்ற வாணலியில் ரவையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும். பின்னர் அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும். பின்னர் உலர்ந்த கறிவேப் பிலை, உப்பு சேர்த்து ஆறவைக்கவும்.

    இந்த கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரிமிக்ஸ் மாவு தயார். இந்த மாவைக் கொண்டு இட்லி, பணியாரம், வடை ஆகிய ரெசிபிகளை செய்து அசத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைப்படும்போது விருப்பமான ரெசிபிகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

    உபயோகிக்கும் முறை:

    இரண்டு கப் பிரீமிக்ஸ் மாவுடன் ஒன்றரை கப் தயிர் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை ஒருமுறை நன்றாகக் கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    இட்லி தயாரிக்க:

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். இப்போது சுவையான ரவா இட்லி ரெடி.

    குழிப்பணியாரம் தயாரிக்க:

    அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதன் குழிகளில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், அது சூடானதும் டீஸ்பூன் மூலம் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு அளவிற்கு ஊற்றி வேக வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் தயார்.

    வடை தயாரிக்க:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். தயாரித்து வைத்திருக்கும் மாவை வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி, காரச்சட்னி, சாம்பார் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    உணவுப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் போது அதற்கு தேவையான சான்றிதழ்களை வாங்க வேண்டியது அவசியம், பிராண்டு பெயருடன் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். பொருட்காட்சிகளிலும் உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.

    Next Story
    ×