search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் படுஜோராக பரவி வரும் ஷேப்வியர்...
    X

    டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் படுஜோராக பரவி வரும் ஷேப்வியர்...

    • புடவை மட்டுமல்ல, லெஹங்கா போன்ற நவீன உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
    • இதை அணிந்து புடவை கட்டும்போது, உடலும் புடவையும் பிட்டாக காட்சிதரும்.

    நவீனமான உடைகள் எவ்வளவோ வந்தாலும், நம் பாரம்பரிய உடையான புடவைக்கு ஈடு இணையாகாது. பேஷன் டிரெண்டிற்கு ஏற்ப பட்டுப் புடவைகளும், ஜாக்கெட் வகைகளும் நவீனமாகிக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், 'ஷேப்வியர்' துணிகள், புடவை பிரியர்களின் சவுகரியத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது, புடவை அணிபவர்களை கூடுதல் அழகாக்கி இருக்கிறது. அது என்ன ஷேப்வியர், இதன் பயன்கள் என்ன... போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், பேஷன் துறை வல்லுனரான புவனேஸ்வரி.

    கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இப்போது சென்னை ஆவடியில் வசிக்கிறார். இவர் பெண்களின் பேஷன் தேவைக்கு ஏற்ப, புதுமையான உடைகளை வடிவமைத்து, தயாரித்து அசத்துகிறார்.

    இவர் 'ஷேப்வியர்' பற்றி பகிர்ந்து கொண்டவை...

    ''மார்டன் உடைகளை அணியும்போது, உடலை கட்டுக்கோப்பாக காட்டவும், உடலுக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளிநாடுகளில் 'பாடிவியர்' என்ற உள்ளாடை பயன்படுத்தப்படும். இது கச்சிதமான தோற்றத்தையும், சவுகரியமான உணர்வையும் கொடுக்கும். அதே கான்செப்டில்தான், இந்த 'ஸேரி ஷேப்வியர்' உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இது புடவை அணிபவர்களுக்கு, சிறப்பானதாக இருக்கும். புடவை மட்டுமல்ல, லெஹங்கா போன்ற நவீன உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்'' என்றவர், இதன் பயன்பாட்டை விளக்கினார்.

    ''புடவை அணியும்போது, உள்பாவாடை அணிவது வழக்கம். அப்படி அணியும்போது, உடல் வழக்கத்தைவிட கொஞ்சம் 'புஸ்ஸென' பருமனாக தோன்றும். அந்த அசவுகரியத்தை போக்கும் நோக்கில்தான், இந்த ஷேப்வியர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதை அணிந்து புடவை கட்டும்போது, உடலும் புடவையும் பிட்டாக காட்சிதரும். நடப்பதற்கும், உட்காருவதற்கும் சவுகரியமாக இருக்கும். குறிப்பாக, இடுப்பில் கச்சிதமாக பொருந்திவிடும்'' என்றவர், இது நவீன கால பெண்களின் விருப்பமான உடையாக மாறியதை பகிர்ந்து கொண்டார்.

    ''முன்பெல்லாம், திருமண பெண்கள் மட்டுமே பட்டு புடவை அணியும்போது, இதை பயன்படுத்தினர். ஆனால் இப்போது அலுவலகத்திற்கு புடவை அணிந்து செல்லும் பெண்களும், இதை வழக்கமாக்கிக் கொண்டனர். இவை, மிக குறைந்த விலையில் இருந்தே ஆரம்பிப்பதால், பெரும்பாலான பெண்களின் விருப்பமான உடையாக மாறிவிட்டது'' என்றவர், இதை தேர்ந்தெடுத்து வாங்குவது குறித்து விளக்கினார்.

    ''ஷேப்வியர், நிறைய துணிகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றோட்டம் இல்லாத நைலான் கலந்த ஜெர்ஸி துணிகளிலும் இவை தயாரிக்கப்படுவதால், இதன் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்.

    முடிந்தவரை, காற்றோட்டமான 'ஸ்பாண்டெக்ஸ்' துணிவகைகளை தேர்வு செய்வது நல்லது. அதேபோல, உங்களது தேவைக்கு ஏற்ப, இதில் சில வடிவ அமைப்புகளும் உண்டு.

    அதில் 'மெர்மைட் கட்' சிறப்பானதாக இருக்கும். மெர்மைட் கட் என்பது, மீன் வடிவத்தை கொண்டது. இடுப்பு பகுதியில் குறுகியும், தொடை பகுதியில் விரிவாகவும், மீண்டும் முட்டிப்பகுதியில் குறுகியும் இருக்கும். இதை பயன்படுத்தும்போது, எந்த அசவுரியமும் இல்லாமல் நடக்கலாம். மேலும் இடுப்பு பகுதியில், பிடிமானத்திற்கு ஏதுவாக நாடா இருக்கிறதா என்பதை பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துங்கள்'' என்றவர், இது புடவைக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஒருசில நவ-நாகரிக மார்டன் உடைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்.

    ''இந்த ஷேப்வியர் ஆடையில், முட்டி வரையில் மட்டுமே இருக்கக்கூடிய வகைகளும் உண்டு. அதை, மார்டன் உடைகளுக்குள்ளும் பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் நகர்புறங்களில் மட்டுமே பெரிதாக வரவேற்கப்பட்ட இவை, இப்போது கிராமப்புறங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. ஒருகாலத்தில் லெக்கிங்ஸ் ரக ஆடைகள் பிரபலமானதை போல, இப்போது ஷேப்வியர் ரகங்களும், டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் படுஜோராக பரவி வருகிறது. உடை மட்டுமல்ல, இந்த உடை சார்பான வர்த்தகமும் பெருகிவிட்டது. கல்லூரி பெண்கள் மற்றும் இல்லத்தரிசிகளும், இதை சமூக வலைத்தளங்கள் வாயிலாக விற்பனை செய்கிறார்கள். தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பல பெண்கள், தொழில்முனைவோர்களாக மாறி இதுசார்ந்த தயாரிப்பு நிறுவனங்களையும் தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டை போலவே, வெளிநாடுகளில் செட்டிலாகி இருக்கும் தமிழ்பெண்கள், இதை அதிகமாக விரும்புகிறார்கள். அவர்களுக்காக, ஏற்றுமதி தொழில்களும் சூடுபிடித்திருக்கிறது. கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுவீடன்... போன்ற உலக நாடுகளிலும், இது சார்ந்த வர்த்தகம் சூடுபிடித்திருக்கிறது'' என்றவர், இனி வருங்காலங்களில் இதன் தேவையும், உற்பத்தியும் அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    Next Story
    ×