search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கல் வைத்த நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?
    X

    கல் வைத்த நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

    • நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
    • நகைகளை பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.

    வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.

    எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும். நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

    நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது.

    அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.

    மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

    எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    Next Story
    ×