search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் ஸ்ரீனிவாசன்
    X

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் ஸ்ரீனிவாசன்

    • இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்.

    கடந்த ஜூலை மாதம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியது.

    ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு ரூ.390 என்ற விலை கொடுத்து மொத்தமாக ரூ.3,954 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை அல்ட்ரா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்திருந்தது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது.

    டிசம்பர் 24 அன்று இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்டின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.

    அதனால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் பதவி விலகியுள்ளார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமானது (ICL) கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யர் மற்றும் டி.எஸ் நாராயண ஸ்வாமி ஆகியோரால் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தந்தை நாராயண ஸ்வாமியின் மறைவுக்குப் பின் தனது 23 வது வயதிலேயே ஸ்ரீனிவாசன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்ட்டராக பொறுப்பேற்றார்.

    அவரது தலைமையில் இந்தியா சிமெண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நாள்வரை அந்த தலைமைப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாசன் தலைமையிலான இந்தியா சிமெண்ட்ஸ் போட்டி அதிகரித்ததாலும், விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் நிறுவனத்தின் பங்குகளை ஸ்ரீனிவாசன் விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீனிவாசனின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியதாகும். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் [ஐ.சி.சி] தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான் பி.சி.சி.ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

    தற்போது ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் 30 சதவீத பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் ஷேர்ஹோல்டர்ஸ் டிரஸ்ட், அதே பெயரில் வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×