search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு எப்போது? ஒரு ஆண்டாக பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு எப்போது? ஒரு ஆண்டாக பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள்.
    • ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    அதன்படி 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37-வது மாவட்ட மாக உதயமானது.

    புதிய மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பல புதிய துறைகள் கொண்டு வரப்பட்டன.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க தொடங்கியது.

    அங்கு செயல்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகமாக தற்போது செயல்பட்டு வரும் இடத்தில் போதிய இடவசதி இல்லை. கடும் இடநெருக்கடி காரணமாக இப்போது உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் துறைகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட முடியவில்லை.

    இதனால் புதிய துறைகள் மற்றும் அதன் அதிகாரிகள், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் வாடகை கட்டிடத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இதையடுத்து ஒரே கட்டிடத்துக்குள் ஒருங்கிணைந்து அலுவலகங்கள் இயங்குவதற்காக, புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செங்கல்பட்டு நகரை ஒட்டிய ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வெண்பாக்கம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்து 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. தரை தளத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட ரூ.120-கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு 2022-ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது.

    கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் பொதுப்பணி துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை, சுகாதாரத் துறை, சுற்று சூழல் துறை, பேரிடர் மேலாண்மை துறை,நீர் வளத் துறை, விவசாயத் துறை, வேளாண்மை துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை, சமூக நலத்துறை, கால் நடைகள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தீயணைப்பு துறை, கல்வி துறை, தொழிலாளிகள் நலத்துறை, விஞ்ஞானத்துறை, தமிழ் இலக்கிய துறை, நிதித்துறை உள்பட 35 துறையின் அலுவலகங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்படும் வகையில் தயார் நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் புதிய கட்டிடத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு தனியார் காவலர்கள் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இப்போது இயங்கி வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுகிறது. ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    அனைத்து துறை அலுவலகமும் ஒரே இடத்தில் செயல்பட முடியாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுவதால் பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    எந்தத் துறை அலுவலகம் எந்த இடத்தில் செயல்படுகிறது என்று தெரியாமல் தினந்தோறும் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மாவட்ட மாற்று திறனாளி அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, நீர் வளத்துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை, கனிமவளத்துறை விவசாயம் மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்டவை செங்கல்பட்டு நகரத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்குவதால் பல்வேறு ஊர்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

    இதனால் செங்கல்பட்டு நகரத்திற்குள் பிரம்மாண்டமாக 4 மாடிகளில் எழுந்து நிற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

    இவ்வளவு பெரிய கட்டிடம் பணிகள் முடிந்தும் ஏன் திறக்கப்படாமல் உள்ளது? என்ற கேள்வி அவர்கள் எண்ணத்தில் எழுந்து வருகிறது. ஆனால் இது பற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்கும்போது சரி வர எந்த பதிலும் கூறாமல் உள்ளனர்.

    இதனால் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பது எப்போது என்ற கேள்விகளுடனேயே அவர்கள் காத்து இருக்கிறார்கள்.

    இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 -ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிந்தது. இதனால் அரசுத்துறை அலுவலகங்களுக்கு மக்கள் எளிதில் சென்று வரலாம் என்று நினைத்தோம். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் 4 மாடியில் பிரம்மாண்டமாக கட்டி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அங்கு எந்தத் துறைகளும் செயல்படவில்லை. கட்டிடம் மூடியே கிடக்கிறது.

    அதில் செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக செயல்படுகின்றன .இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஒவ்வொரு துறை அலுவலகமும் என்று உள்ளது எங்கு தேடி கண்டுபிடித்து செல்வதற்கு பெரும்பாடு பட்டு வருகிறார்கள்.

    புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள். தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதால் திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறையுடன் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் கலெக்டர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த கட்டிடப் பணிக்காக ரூ.120 கோடி முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புக்கு தயார் நிலையில் உள்ளது. சில சிக்கல்கள் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றனர்

    Next Story
    ×