search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்சி தலைமையை மீறிய 13 கவுன்சிலர்கள்: திரை மறைவில் நடந்த `உள்ளடி வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி
    X

    கட்சி தலைமையை மீறிய 13 கவுன்சிலர்கள்: திரை மறைவில் நடந்த `உள்ளடி' வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி

    • தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
    • திரைமறைவில் நடந்த ‘உள்ளடி’ வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தி.மு.க. சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

    மாநகராட்சியில் தி.மு.க.-கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேர் இருப்பதால், ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்த உள்ள 55 கவுன்சிலர்களில் ஒருவர் மட்டும் வரவில்லை. மீதமுள்ள 54 பேர் ஓட்டு போட்டதில் ஒரு ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 30 ஓட்டுகளும், பவுல்ராஜூக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

    கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கவுன்சிலர் 23 வாக்குகள் பெற்றது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    தலைமையின் உத்தரவையும் மீறி கவுன்சிலர் பவுல்ராஜிக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், திரை மறைவுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்கள், கவுன்சிலர்களின் உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளது என்கின்றனர்.

    நெல்லை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் அனைவருமே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். இவர்களில் 90 சதவீதம் கவுன்சிலர்கள் தற்போது வரை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.

    ஏற்கனவே இருந்த மேயர் சரவணனும் இவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் மேயர் ஆனதிலிருந்து அவருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் தொடங்கியது.

    ஒரு கட்டத்தில் மாநகராட்சி பணிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தலையீடு அதிகரிக்க தொடங்கியதால் சரவணன் அவரை எதிர்த்து களத்தில் இறங்கினார். இதனால் மேயரை செயல்பட விடாமல் செய்யும் நோக்கில் கவுன்சிலர்களை அப்துல் வஹாப் தவறாக வழிநடத்தியதாக பலரும் புகார் கூறினர்.

    ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதீத நெருக்கடியின் காரணமாக சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

    இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அப்துல் வகாப்புக்கு ஆதரவான கவுன்சிலரை மேயராக அறிவித்தால் மட்டுமே மீண்டும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்சனை இன்றி நடைபெறும் என்று தி.மு.க தலைமை கருதியது.

    இதன் காரணமாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவரது ஆதரவாளரான ராமகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று சில கவுன்சிலர்கள் பேரம் பேசியதால் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 'வைட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    எனினும் ராமகிருஷ்ணனை தேர்வு செய்யும் பட்சத்தில் அப்துல் வஹாப்பின் தலையீடு மாநகராட்சியில் மீண்டும் எழுந்து விடும் என்றும், நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் எல்லாம் கிடைக்காது என சில கவுன்சிலர்கள் கருதினர்.

    இதனால் போட்டி வேட்பாளர் யாராவது நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமார் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததாகவே தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் தனித்து போட்டியிடவே அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்தது. தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கனவோடு காத்திருந்த கவுன்சிலர்களில் சிலரும், தங்கள் சமுதாயத்தை புறக்கணிப்பதாக கருதும் சில கவுன்சிலர்களும் பவுல்ராஜூக்கு வாக்களித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இது தவிர முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானின் ஆதரவு கவுன்சிலர்கள், மாநகர செயலாளருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் என சிலரும் பவுல்ராஜூக்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடும் எனவும், இதனால் பவுல்ராஜ் 23 வாக்குள் பெற்றிருக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நெல்லைக்கு வந்த அமைச்சர் கே. என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஒரு கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நிச்சயமாக போட்டி இருந்திருக்காது எனவும், மேயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றும் கவுன்சிலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    ஆனால் கட்சி தலைமையும் முறையாக ஆலோசிக்காமல் மேயர் வேட்பாளராக நிறுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். இனிவரும் மாநகராட்சி கூட்டங்கள் கண்டிப்பாக ஒரு யுத்த களமாக காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கவுன்சிலர்கள் சிலர் கூறுகின்றனர்.

    கவுன்சிலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பின்னரும், போட்டி இல்லாமல் ஒரு மனதாக மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா என அமைச்சர்களையும், அப்துல் வகாப எம.எல்.ஏ.வையும் கட்சி தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் பவுல்ராஜூக்கு பின்னால் இருந்து செயல்பட்ட கவுன்சிலர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×