என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 15 பேர் ஆழ்கடலில் கைது
- தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர்.
- விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் ஆழ்கடல் மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதக்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து திரும்புவது வழக்கம்.
அப்போது கடல் எல்லையை தாண்டி வந்ததாக வெளிநாடுகளால் கைது செய்யப்படுவதும் உண்டு. இதுபோல தற்போது 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷார்ஜின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி 15 மீனவர்கள் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர்.
தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் டிக்கோகார்சியா தீவு அருகே ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து 15 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.