search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான1500 கிலோ பீடி இலை பறிமுதல்
    X

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான1500 கிலோ பீடி இலை பறிமுதல்

    • போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து அவ்வப்போது பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதனை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை 2 மணி அளவில் கடற்கரை ஓரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    போலீசார் வருவதை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பி ஓடினர். போலீசார் சோதனை செய்ததில், வாகனத்தில் 30 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 1500 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் அவர்கள் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் கைப்பற்றி வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மே மாதம் தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள், அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் என அடுத்தடுத்து ரூ.1 கோடியை 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை 'கியூ' பிரிவு போலீசார் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    Next Story
    ×