என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் 15-ந்தேதி பா.ஜ.க. போராட்டம்: அண்ணாமலை
- பால் விலை ஏற்றத்தை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது.
- விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது.
சென்னை :
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழந்தை முதல் முதியவர் வரை, பாமர மக்கள் எல்லாம் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பால் விலை ஏற்றத்தை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது. விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது. விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு, பால் விலையை உயர்த்தி இருப்பதுதான் மக்கள் விடியலுக்குத் தரும் விலையா?
தமிழக அரசின் 'ஆவின்' பால் வழங்கும் நிறுவனம், அதன் நிர்வாக சீர்கேட்டினால், நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையிலே சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பதிவுக்கட்டண உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, என்று அத்தனை வரிகளையும் தாறுமாறாக உயர்த்தி விட்டு, இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படும் பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, வாக்களித்த தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் வரிகள் எல்லாம் ஏறுமுகம், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எல்லாம் ஏறுமுகம், ஆனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இறங்கு முகத்தில் இருக்கிறது. ஆளும் தி.மு.க. அரசு, கலர் கலரான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஆவின் பால் பாக்கெட்களை கலர் கலராக வேறுபடுத்தி கண்டபடி விலையை உயர்த்தி, மக்களை துன்பப்படுத்துகிறது.
எனவே தி.மு.க. ஆட்சியை கண்டித்து தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில் வருகிற 15-ந்தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






