search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ரெயில் நிலையங்களில் இதய நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் நவீன கருவி
    X

    2 ரெயில் நிலையங்களில் இதய நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் நவீன கருவி

    • ரெயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • கருவி குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நகரின் முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ரெயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இதய பிரச்சனைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல, சென்டிரல் ரெயில் நிலையத்தில் 7 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட்டர் (ஏ.இ.டி.) என்று அழைக்கப்படும் இந்த கருவி, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் இதய துடிப்பை சரிசெய்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இந்த கருவியை முதல்கட்டமாக சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வைத்துள்ளோம்.

    இதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்காக ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.

    Next Story
    ×