search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் 262 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது
    X

    நாமக்கல்லில் 262 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது

    • போதை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்
    • வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). இவர் சொந்தமாக மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்த மினி டெம்போவில் நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றிக் கொண்டு அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று கார்த்திக் தனது மினி டெம்போவில் முட்டை லோடு ஏற்றிக் கொண்டு கர்நாடகாவுக்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கு முட்டை லோடு இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பியபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்- 74 கிலோ, பான்மசாலா-77 கிலோ, கூல் லிப்-23 கிலோ உள்ளிட்ட 262 கிலோ போதை பொருட்களை மினிடெம்போவில் கடத்தி கொண்டு வந்தார்.

    மினி டெம்போ கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட சோதனை சாவடிகளை கடந்து நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்தது. அப்போது நாமக்கல் கருப்பட்டிபாளையம் பிரிவு சாலையில் நல்லிபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த மினி டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து, டிரைவர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை கடைகளில் கொடுத்து விற்பனை செய்வதற்காக கடத்தி கொண்டு வந்துள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருட்கள் மற்றும் மினி டெம்போ ஆகியவை நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×