என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி அருகே ஆயுதங்களுடன் கைதான 3 பேர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
- மதுரையில் 2 குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் செல்லத்துரை, சுரேஷ், அருண், செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் லிங்கம் பட்டியில் உள்ள அந்த வீட்டை மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர்.
அதில் அந்த வீட்டில் குற்றவாளிகள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களைப் பிடிக்க அந்த வீட்டுக்கு சென்றபோது வீட்டில் இருந்தவர்கள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கதவைத் திறக்க மறுத்துள்ளனர். கதவை உடைத்து அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் முயன்ற போது, திடீரென கதவை திறந்து கண்ணிமைக்கும் நொடியில் வீட்டில் இருந்து 3 பேர் தப்பி சென்றனர்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மதுரை புது மீனாட்சி நகரை சேர்ந்த அழகுராஜா என்ற கொட்டு ராஜா (வயது 29), மதுரை கீரை துறையை சேர்ந்த முனியசாமி (50) மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (28) என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அழகுராஜா மீது 3 கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளும், முனியசாமி மீது 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட 11 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தங்கராஜ் மீது 4 கஞ்சா வழக்குகளும் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், 15 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பிரபல ரவுடிகள் இங்கு ஏன் தங்கியிருந்தனர்? வேறு யாரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் 2 குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இதில், கோவில்பட்டியில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மதுரையில் தங்களுக்கு எதிர் முகாமை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் இருந்ததால் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியில் வீடு எடுத்து பதுங்கி இருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால், வேறு யாரையும் கொலை செய்யத் திட்டமிட்டு பதுங்கி இருந்தனரா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.