search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே லாரி-சரக்கு ஆட்டோ மோதி விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
    X

    பரமத்திவேலூர் அருகே லாரி-சரக்கு ஆட்டோ மோதி விபத்து- 3 தொழிலாளர்கள் பலி

    • பூவேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். ஆட்டோ டிரைவர்.

    இவர் ஈரோட்டில் ஒரு திருமண மண்டபத்திற்கு அலங்காரம் செய்வதற்காக அலங்காரப் பொருட்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் சிவநாதன் (வயது20.), கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சிவா (வயது19), அதே பகுதியைச் சேர்ந்த பூவேஷ், வெங்கரைப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஈரோடு பகுதிக்கு சென்றார்.

    பின்னர் திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்துவிட்டு மீண்டும் கபிலர்மலை வருவதற்காக ஜேடர்பாளையம் வந்து ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி செல்லும் சாலையில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்தானது.

    இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த சிவநாதன், சிவா ஆகியோருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தனர். அதேபோல் பூவேஷ், ரமேஷ், ஆட்டோ டிரைவர் சாமிநாதன் ஆகிய 3 பேருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிவநாதன் மற்றும் சிவா, பூவேஷ், ரமேஷ், சாமிநாதன் ஆகிய 5 பேரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவநாதன் மற்றும் சிவா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதேபோல் பூவேஷ், ரமேஷ், சாமிநாதன் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பூவேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ரமேஷ், சாமிநாதன் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவநாதன் மற்றும் சிவா, பூவேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×