search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-ந்தேதி ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    4-ந்தேதி ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி செல்ல தடை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படும். இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன், திருவிழாவை யொட்டி வனப்பகுதியில் குடில் அமைத்து அங்கேயே தங்குவார்கள். அப்போது பூக்குழி இறங்குதல், கிடா வெட்டு என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.

    திருவிழாவையொட்டி கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குடிலில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்வதற்காக இன்று மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி இன்று அதிகாலை 6 மணி முதலே வாகனங்களில் பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இன்று 8 மணி அளவில் சுமார் 200 வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பாபநாசம்-நெல்லை சாலையில் டானா பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் அதிக அளவிலான வாகனங்கள் செல்லும் என கூறப்படுகிறது. இந்த வாகனங்கள் இன்று மாலை 5 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை முதல் அரசு பஸ்களில் பக்தர்கள் செல்ல வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்கிடையே திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், வனத்துறை, சிங்கை, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.மேலும் தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடில்கள் அமைக்கப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பணம் செலுத்தி குடிலை வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளலாம்.

    மேலும் 97 நிரந்தர கழிப்பறைகளும், 130 மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×