என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் 500 டன் காய்கறிகள் தேக்கம்
- காய்கறிகள் தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் அதிகாலையில் மொத்த வியாபாரிகள் அதிரடியாக விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
- விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று 500 டன் அளவிலான பச்சை காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து பாதியாக குறைந்து விட்டது.
இதனால் காய்கறிகள் தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் அதிகாலையில் மொத்த வியாபாரிகள் அதிரடியாக விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
உஜாலா கத்தரிக்காய் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.500-க்கும், வரி கத்தரிக்காய் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.300-க்கும், பீன்ஸ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.500-க்கும் சவ்சவ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
எனினும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று 500 டன் அளவிலான பச்சை காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதேபோல் புயல் அச்சம் காரணமாக பொதுமக்கள் வரத்து அதிகளவில் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.






