search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கரின் சொத்துக்களை மதிப்பிடும் பணி தீவிரம்
    X

    முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கரின் சொத்துக்களை மதிப்பிடும் பணி தீவிரம்

    • வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

    அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சோதனை நடத்தினர்.

    நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 13 மணிநேரம் சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்தது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி இன்று நடைபெற்றது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.

    லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×