என் மலர்
உள்ளூர் செய்திகள்
200 வருடங்களுக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோவிலில் சாமி தரிசனம்
- மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர்.
- போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்த வாய்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் அல்லாமல் பிற மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கோவிலில் இதுநாள் வரையில் ஆதிதிராவிடர் மக்கள் உள்ளே நுழைந்து சாமி கும்பிட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஆதிதிராவிட மக்களுக்கு இருந்து வந்த நிலையில் இது நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் நுழைந்த சாமி கும்பிட வேண்டும் என ஆதிதிராவிட சமூக மக்கள் முடிவெடுத்து கடந்த 6 மாத காலமாக போராடி வந்துள்ளனர். இதற்காக சமீபத்தில், இதனால் எழுந்த பிரச்சனையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்கு றிச்சி கோட்டாட்சியர் அலு வலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் இந்த வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு இன்று ஜனவரி 2ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 300 க்கும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். தற்போது டிஐஜி யாக பதிவி உயர்வு பெற்றுள்ள பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோரது தலைமையில் அதிரடி படையினர் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்து வரதராஜா பெருமாள் கோவிலுக்கு உள்ளே கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் நுழைந்து சாமி கும்பிட ஆரம்பித்தனர். கோவிலுக்குள் இதுவரை வராத ஆதி திராவிட சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் கோவி லுக்குள் நுழைந்து பெருமா ளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
அப்போது ஆதிதிராவிட சமூக மக்கள் அனைவரும் பரவசமாக காணப்பட்டனர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி கும்பிடு வதற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வரு கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் எடுத்தவாய் நத்தம் கிராமத்திற்கு வந்து கண்காணித்து வந்தனர்.