என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நான் இந்த அளவுக்கு தகுதி பெற அன்பழகன் தான் காரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
- 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன்.
சென்னை :
மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு அனைவரையும் வரவேற்றார். கட்சியின் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.பி.க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கருணாநிதியின் ஆற்றல், ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன். மு.க.ஸ்டாலினை போல், இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடையில் பாராட்டியவரும் அவர்தான். வாரிசு, வாரிசு என்று இன்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே. அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல பாராட்டு பத்திரம் கொடுத்தவர் க.அன்பழகன்தான்.
கருணாநிதிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். எனவே அடுத்த தலைமுறையை பாதுகாக்கவேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் க.அன்பழகன். கட்சியின் செயல்தலைவராக என்னை முன்மொழிந்தவரும் அவர்தான். தலைவர் மறைவுக்கு பிறகு என்னை தலைவராக முன்மொழிந்தவரும் அவர்தான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க அனைத்துக்கும் காரணம் அவர்தான். அவர் எந்த அளவுக்கு கோபக்காரரோ, அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதையும் மறந்துவிடமுடியாது.
திராவிட மாடல் ஆட்சி கொள்கையை, வலிமையை கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் என்ற கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். இதற்காக இளைஞர் அணி, மாணவர் அணிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் அதனை ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே என பட்டித்தொட்டிகளெல்லாம் பாசறை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். இதுதான் க.அன்பழகனுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த கண்காட்சியை தான் திறந்து வைப்பது பொருத்தமாக இருக்காது என்றும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்