என் மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை: பயணிகள் வரவேற்பு
- தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
- 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த மு.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங், அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என பெயர் சூட்டினார்.
2017-ம் ஆண்டு சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. விமான நிலையத்தில் மீண்டும் தலைவர்கள் பெயர்களை வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், நாடார் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த விமான நிலைய ஆலோசனை குழு கூட்டத்தில் விமான நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் டி.ஆர்.பாலு எம்.பி. அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கட்டிடத்தில் அண்ணா பன்னாட்டு முனையம் எனவும், உள்நாட்டு முனையத்தில் காமராஜ் உள்நாட்டு முனையம் எனவும் மீண்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு விமான நிலைய முனையங்களுக்கு மீண்டும் தலைவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.