search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆணைய நீதிபதி பேச்சு
    X

    தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆணைய நீதிபதி பேச்சு

    • தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆணைய நீதிபதி பேசினார்
    • பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வழக்குரைஞர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த மாநாட்டில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராக உள்ளதால் தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும். இதனை வலுப்படுத்த நுகர்வோர்களும், வழக்குரைஞர்களும் முன் வரவேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில், 60- க்கும் மேற்பட்ட வகையான பிரச்னைகளுக்கு புகார் தாக்கல் செய்யவும், பலவகையான தீர்வுகளை பெறவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. இணையதளம் மூலம் நடத்தப்படும் விளையாட்டு போட்டி போன்ற தன்மையிலான வணிகங்கள் உட்பட அனைத்து வகையான நுகர்வோரின் இணையதள பயன்பாடுகளில் பிரச்னை ஏற்படும் போது எங்கு அணுகுவது என்ற குழப்பமான நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மாறிவரும் இணையதள யுகத்தில் ஏற்படும் இத்தகைய சவால்களை முறியடிக்கவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகுத்துள்ளது. பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம். பணம் செலுத்தி பெறக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக இயலும். கட்டணம் இல்லாமல் அரசு வழங்கும் பல்வேறு சேவைகளில் பிரச்னை ஏற்படும்போது மக்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் சேவை உரிமை தீர்ப்பாயங்களாக மாற்றலாம். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் நமது மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநாட்டில், வழக்குரைஞர் சங்கச் தலைவர் மனேகோரன், செந்துறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் சின்னதுரை, அரியலூர் வழக்குரைஞர் சுகுமார் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு வழக்குரைஞர் ஏ.கதிரவன் வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கச் செயலர் வி.முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.


    Next Story
    ×