என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
    X

    2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

    • 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
    • குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 39). தச்சு தொழிலாளியான இவருக்கும், சாத்தமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கணேசனின் மகள் சுதாவுக்கும்(28) திருமணம் நடந்து, சுமார் 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் வேல்முருகனுக்கும், சுதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று காலை வேல்முருகன், சமைப்பதற்காக இறைச்சி எடுத்து சுதாவிடம் கொடுத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த சுதா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அணைக்கரை ராஜ வாய்க்கால் பகுதிக்கு சென்று, குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்சியம் மற்றும் வீரமணி ஆகியோர் விரைந்து சென்று, அவர்களை மீட்டு அணைக்கரை சோதனை சாவடியில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் அவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கவுன்சிலிங்குக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த வேல்முருகன், சுதா ஆகிய ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரித்து, இருவருக்கும் அறிவுரை கூறினர். மேலும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், சிறு சிறு பிரச்சினைகள் வந்தால் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தவும், இருவருக்கும் நீண்ட நேரமாக அறிவுரை கூறினர்.

    நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு கணவருடன் செல்வதாக சுதா ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

    Next Story
    ×